Dec 2, 2011

மறுமலர்ச்சியை எதிர்நோக்கி மற்றுமொரு புத்தாண்டு


லக மக்களிடையே புதுவருடப்பிறப்பு என ஆங்கில நாட்காட்டியின் அடிப்படையிலான ஜனவரி மாதத்தின் முதல்நாள் பல்வேறு அனாச்சார களியாட்டங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகின் அதிவேக வளர்ச்சியில் தங்களையும் பிணைத்துக் கொண்ட, இந்நவீன உலகின் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்களும் அதே தினத்தைப் புதுவருடப்பிறப்பாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதும், இஸ்லாமிய வருடப்பிறப்பான இச்சிறப்புமிகு முஹர்ரம் மாதத்தில் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட ஆஷூரா, தாசுஆ தின நோன்புகளை நோற்காமல் அல்லது இம்மாதத்தின் மகத்துவத்தை உணராமல் ஏதோ  கடமைக்காகச் செய்வதுபோல் நோன்பு வைப்பதும் எங்கும் பரவலாக இன்று காணமுடிகிறது.
இஸ்லாமிய சமூகத்தின் ஒரு பெரும்பகுதி ஒருபுறம் அன்னியக் கலாச்சாரத்தில் வீழ்ந்து இஸ்லாமியக் கலாச்சாரத்தை மறந்து கொண்டிருக்கும் அதேவேளை, இச்சமூகத்தின் மற்றொரு பெரும்பகுதியோ இஸ்லாம் வெறுக்கும் பல்வேறு அனாச்சாரச் செயல்களில் தன்னை ஈடுபடுத்தி, மற்றவர்களின்முன் இறைவன் அளித்த உயர்ந்த வாழ்க்கை நெறியைக் கேலிக்குள்ளாக்கி வருகின்றது.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை மேற்கத்தியக் கலாச்சாரங்கள் கொள்ளை கொண்டிருக்கும் இந்நவீன காலகட்டத்தில் ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும், இஸ்லாமிய உலகை நோக்கி இழந்து போன தங்களின் கலாச்சாரத்தை மீண்டெடுக்க மௌன அழைப்பு விடுத்து அமைதியாக சென்று கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு முஹர்ரம் மாதத்தின் பிறப்பும் இஸ்லாமிய உலகிற்குப் புத்துணர்ச்சியைத் தந்து, வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கு பதில் எவ்வித உணர்வுமின்றி சாதாரணமாகக் கடந்து செல்வதற்குக் காரணம் இம்முஸ்லிம் சமூகம் சங்கைமிக்க முஹர்ரம் மாதத்தின் மகத்துவத்தைச் சரியாக உணராததும், இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பேணுவதன் கட்டாயத்தை அறியாததுமாகும்.
முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:
இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.
முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும்.
  1. இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும்.
  2. இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும்.
"ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.
மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.
ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

"மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள.

இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பை முஸ்லிம் உலகம் அனுஷ்டித்து வருகின்றது.
முஹர்ரம் மாதப் படிப்பினைகள்:
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை.
நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்?
அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன.
யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர்.
இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர்.
அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்.
அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள்.
இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும்.
ஆனால் இன்று நடப்பது என்ன?
  • பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் புதுவருடப்பிறப்பு எனில் அது ஜனவரி 1 தான்.
  • பெரும்பாலான முஸ்லிம்கள் தினசரி உபயோகிக்கும் நாள்காட்டியும் மாற்றார்களின் கடவுள்களை மகிமைப் படுத்தும் அல்லது நினைவு படுத்தும் முகமாகப் பெயரிடப்பட்ட கிழமைகளைக் கொண்ட நாட்காட்டிதான்.
  • பெரும்பாலான முஸ்லிம்கள் உடுத்தும் ஆடை முறையும் கரண்டைக்கு கீழே இழுபடும் அல்லது உடல் பாகங்களை வெளிப்படுத்தும் விதமான மேற்கத்திய ஆடைமுறைதான்.
  • ஷியா முஸ்லிம்கள் இறந்தவர்களை நினைவு கூரும் முறையும், மாற்றார்கள் தன்னிலை மறந்து தரையில் விழுந்து அழுது புரண்டு தங்களது அங்கங்களையே காயப்படுத்திக் கொள்ளும் "பஞ்சா" போன்ற முறைகள்தாம்.
இன்னும் அடுக்கிக் கொள்ள இச்சமுதாயத்தில் அனாச்சார விஷயங்கள் எண்ணற்று மலிந்து நிறைந்துள்ளன.
இவ்விதம் அனாச்சாரங்களின் கூடாரமாக கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு முஹர்ரம் மாதத் துவக்கம் தரும் மகத்தான மற்றொரு சிந்தனை என்ன?
முஹர்ரம் மாதம் இஸ்லாமிய வருடத்தின் ஆரம்ப மாதம் என்பதோடு நிற்காமல் சற்று அதன் ஆழத்திற்கு இறங்கிச் சென்றால் புதுவருடம் தரும் மகத்தான சிந்தனையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

Oct 19, 2011

ஹேக்கிங் என்றால் என்ன?


இணையத்தை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள் அப்படி நீங்கள் இதை தெரிந்து இருக்கவில்லை என்றால் இணையத்தை பயன்படுத்த போதுமான அறிவை நீங்கள் இன்னும் பெறவில்லை என்பதே நிஜம். எனவே ஹேக்கிங் பற்றி தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டிய இடுகை இதுவாகும்.
ஹேக்கிங் என்றால் என்ன?
உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணையக் கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.
எதற்கு இதை செய்கிறார்கள்?
ஒரு சிலர் இதை பொழுதுபோக்காக செய்கிறார்கள், இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள். ஒரு சிலர் பணத்துக்காக செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால் அவர்கள் நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள். இன்னும் ஒரு சிலர் மற்றவர்களின் வங்கிக்கணக்கை ஆட்டையை போட்டு பட்டை நாமம் சாத்தி விடுவார்கள்.
இதை எவ்வாறு தடுப்பது?
நான் கூறப்போவது உங்களை எச்சரிக்கை படுத்தவே நாம் என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும். எனவே நான் கூறியவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.
1. நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் கணக்கில் சென்று உங்கள் மின்னஞ்சல் கணக்கை httpsமுறையில் மாற்றிக்கொள்ளுங்கள் காரணம் இது அதிக பாதுகாப்பான ஒன்றாகும். http பயன்படுத்தினீர்கள் என்றால் உங்கள் கணக்கை எளிதில் முடக்க முடியும். குறிப்பாக நீங்கள் Public Wireless பயன்படுத்தினால். எனவே நீங்கள் முதல் வேலையாக இதை மாற்றி விடுங்கள். மின்னஞ்சல் கணக்கு என்றில்லை வங்கிக்கணக்கு உட்பட எந்த கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். https உங்கள் தகவல்களை என்க்ரிப்ட் செய்து அனுப்பும்.
2. நீங்கள் எப்போது மின்னஞ்சலை பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுதும் தட்டச்சு செய்யுங்கள் எடுத்துக்காட்டாக https://gmail.com வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் தயவு செய்து போகாதீர்கள். எடுத்துக்காட்டாகwww.emaanthavan.com/google.com என்று இருக்கும் icon smile ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?திறந்தாலும் கூகிள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு பக்கம் போலவே இருக்கும். நீங்கள் கூகிள் கணக்கு என்று நினைத்து உங்கள் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து செல்வீர்கள் ஆனால் உள்ளே ஒன்றும் இருக்காது. நீங்களும் சரி! எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாகwww.gmail.com என்று அடித்து சென்று விடுவீர்கள் ஆனால் உங்களுக்குத் தெரியாது நீங்கள் இன்னொருவருக்கு உங்கள் கடவுச்சொல்லை தாரை வார்த்து விட்டீர்கள் என்று.
3. உங்கள் கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால் அதுவே நீங்கள் இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும். நீங்கள் அவ்வப்போது அது சரியாக செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது. இது நீங்கள் பயன்படுத்துகின்ற உலவிக்கும் பொருந்தும்.
4. உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை தயவு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு சந்தேகம் அளிக்கும் எந்த சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாக சுருட்ட முடியும்.
5. உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் பற்றி கேட்டு எதுவும் மின்னஞ்சல் வந்தால் நீங்கள் தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம். எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம். உங்கள் மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையை சேர்ந்ததாகும்.
6. இலவசமாக கிடைக்கிறது என்று உங்களுக்கு தெரியாத எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற உங்கள் தகவல்களை திருடும் மென்பொருளையும் இணைத்து விடுவார்கள். இது தெரியாமல் இலவசம் என்று சந்தோசமாக நிறுவினால் உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள். நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே! உஷாராக இருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு நல்லது உங்கள் கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.
7. Keylogger என்ற ஒரு மென்பொருள் உள்ளது இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும். எளிமையாக கூறுவதென்றால் சுத்தமாக உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும். இது பற்றி சுருக்கமாக கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் தனியாக இடுகை விரைவில் எழுதுகிறேன்.
8. எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால் அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும். இங்கே மேற்க்கூறிய என்னவேண்டும் என்றாலும் நடக்கலாம் அல்லது அனைத்துமே நடக்கலாம். எனவே உங்களின் முக்கியமான கணக்குகளை இதைப்போல பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள். தவிர்க்க முடியவில்லை என்றால் தயவு செய்து Private Browsing முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் ல் பயன்படுத்தவும். இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது. ஆனால் Keylogger மென்பொருள் முறையில் உங்கள் தகவல்களை திருட முடியும். பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.
9. உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
10. நீங்கள் என்னதான் அனைத்திலும் பக்காவாக இருந்தாலும் உங்கள் கடவுச்சொல் கஷ்டமானதாக இல்லை என்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள். நீங்கள் எவ்வளவு சிறப்பான அல்லது எவ்வளவு கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள். மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் கையோடு மாற்றி விடுங்கள். தகவல் உதவி நன்றி
11. அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, Yahoo, Hotmail, WordPress) ஒரே கடவுச்சொல்லை வைக்கக்கூடாது அப்படி நீங்கள் வைத்தால் ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் உங்கள் கையை விட்டுப்போய் விடும். கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், ப்ளாகர், கூகிள் அனலைசிடிக்ஸ், பிகாசா, காலண்டர், ஃபீட் பர்னர், ரீடர், ஆர்குட், கூகிள் சாட், கூகிள் வாய்ஸ், YouTube, Docs என்று அனைத்தும் காலி ஆகி விடும். ஒரு கடவுச்சொல் ஆனால் நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள். இவை இல்லாமல் Yahoo!, Hotmail, WordPress என்று பல கணக்குகள் உள்ளன.
12. உங்களுடைய கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள் அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால் வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள் அது எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி! இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம் நாளை வேறு ஒருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரை சந்தேகப்பட வேண்டி வரும். இது அனாவசிய பிரச்சனைகளை தரலாம் நட்பை முறிக்கலாம்.
மேற்கூறியவை உங்களுக்கு ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும் இருப்பினும் இதையும் மீறி ஜாக்கிரதையாக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. நம் கணக்கை யாரும் இது வரை முடக்கவில்லை அதனால் நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை. ஹேக் செய்பவர்கள் நினைத்தால் உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் “கணக்கை” முடித்து விடுவார்கள்.

Oct 13, 2011

குழந்தைகளைக் கொஞ்சுவோம்!


அல்லாஹ்வின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. வணக்க வழிபாடுகள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் -  அதல்லாத வழிகளில் அடைய முடியாது என்று நிலவி வந்த வறட்டுச் சிந்தனை வழியனுப்பி வைக்கப்பட்டது.பெற்ற குழந்தைகள் மீது நாம் பொழிகின்ற அன்பு மழையில், பரிமாறிக் கொள்கின்ற பாச அலைகளில், அல்லாஹ்வின் அருளை அடைய முடியும் என்று வளமான சிந்தனை வளர்க்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி),  “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 5997இந்த ஹதீஸ்கள்,  உனது குழந்தையின் பூ முகத்தில் நீ பதிக்கின்ற முத்தங்கள் இறைவனின் அருளைப் பெற்றுத் தரும் என்பதை உணர்த்துகின்றன.  அவ்வாறு குழந்தைகளை முத்தமிடாதவரது இதயத்தில் அன்பை அல்லாஹ் எடுத்து விட்டான், அவருக்கு அல்லாஹ்வின் அன்பு கிடைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் காண முடிகின்றது.
தொழுகை, தஸ்பீஹ், திக்ர், நோன்பு அகிய வணக்கங்கள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்ற எண்ணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தகர்த்தெறிகின்றார்கள். அதனால் தான் தொழுகை என்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் நடத்துகின்ற உரையாடல் என்றிருப்பினும் குழந்தையின் அழுகைக் குரல் காதில் விழுந்து விட்டால் அதை அப்படியே சுருக்கி விட்டிருக்கின்றார்கள் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
“நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (என்னைப் பின்பற்றித் தொழும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகின்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), நூல் : புகாரி 707, 709, 710
சோறு கொடுத்தால் சொர்க்கம்தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஒர் எழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு,  ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார். அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன!  தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம் கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது.அவர் செய்த அந்தக் காரியத்தை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “இதன் மூலம் அல்லாஹ் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்” என்றோ அல்லது “அப்பெண்ணுக்கு நரகிலிருந்து விடுதலை அளித்து விட்டான்” என்றோ கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4764)
பாருங்கள்! தனக்கின்றி தான் பெற்ற குழந்தைக்கு வழங்கும் அந்தத் தாய்க்கு நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்கின்றார்கள். அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குக் காட்டிய கருணைக்காக – ஊட்டிய பேரீச்சம்பழங்களுக்காக இறைவன் அவரை சுவனத்திற்குக் கொண்டு செல்கின்றான்.
இன்று நம்முடைய புண்ணியமிகு தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்குக் கூட வருத்தமாக உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் இரண்டு ஆண்டுகள் தாய்ப் பாலூட்டுமாறு கட்டளையிடுகின்றான். இதை இந்தத் தாய்மார்கள் பொருட்படுத்துவது கிடையாது. பாலூட்டுவதால் தங்கள் மேனி கட்டழகு கெட்டு விடும் என்று கற்பனை செய்து தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய மனிதாபிமானக் கடமையைச் செய்யத் தவறி விடுகின்றார்கள்.
நம்மைச் சுற்றி வலம் வருகின்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாங்கள் ஈனுகின்ற குட்டிகளுக்குப் பால் கொடுக்கத் தவறுவதில்லை. அனால் மனித இனத்தைச் சேர்ந்த இந்தப் புனிதவதியோ பெற்ற பிள்ளைக்கு ‘புட்டி’ பாலைக் கொடுத்து, அந்தப் பால் மாவில் கலந்துள்ள இரசாயனக் கலவையின் மூலம் குடலில் கோளாறு எற்பட வழிவகுக்கின்றாள்.
ஒரு குழந்தை அரை மணி நேரம் குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வகுக்கின்றாள். இது மனிதப் பண்பா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.

நாகரீக மோகத்தில் இராப் பகலாய் பொருளீட்டுவதற்காகப் பாடுபடுகின்ற இயந்திர வாழ்க்கையில் தாய் தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளைக் குழந்தைக் காப்பகங்களில் விட்டு விடுகின்றனர். அல்லது உறவினர் வீட்டில் விட்டு விட்டு அரபு நாட்டில் ஐக்கியமாகி விடுகின்றார்கள்.
இந்தக் குழந்தைகளுக்கு உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின் பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக் பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து விடுகின்றது.
இப்படிப்பட்ட படு மோசமான நிலைகளை விட்டு நீங்கி, குழந்தைகளுடன் பாசப் பிணைப்புடன் வாழ வேண்டும். குழந்தைகள் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய அன்பு அரவணைப்பை நாமும் காட்ட வேண்டும்.
குழந்தைகளுடன் இரண்டறக் கலந்து விடுதல்
நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூ உமைர் என்று அழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகின்றேன். நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்தால்), “அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கின்றது?” என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 6203
ஹராம் ஹலாலைக் கற்றுக் கொடுத்தல்ஹஸன் (ரலி) ஸதகாப் பொருளான ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “சீ, சீ,” எனக் கூறி துப்பச் செய்து விட்டு, “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1491
கையிலெடுத்துக் கொஞ்சுதல்
நபி (ஸல்) அவர்கள் என்னையும், ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கின்றேன். நீயும் நேசிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி), நூல் : புகாரி 3735
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப் பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல்லி அதை சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள். அறிவிப்பவர் : அயிஷா (ரலி), நூல் : புகாரி 2223
குழந்தைகளின் மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் போல் அன்பு காட்டி, அரவணைத்து, அவர்களுக்கு நேர்வழியைக் கற்றுக் கொடுத்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்


கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.
“குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.
“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)
என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:
“இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}
1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்குஇணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறித்த மூலத்தில் ‘அல்ஃபதக்’ எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். {ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!}
நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.
“இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211) என்று கூறும் குர்ஆன்,
“(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (18:98) என்ற கடடளையிடுகின்றது.
ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம்.
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது

Oct 3, 2011

லிபியா சொல்லும் சேதி!



நீங்கள் எத்தனைச் சின்னவர்கள் என்பதல்ல விசயம்! உங்கள் அபார நம்பிக்கையும் நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியை தீர்மானிக்கும்!
இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ ஒரு வட ஆப்பிரிக்க இளைஞனுக்கு முற்றிலும் பொருந்தும். 1960களில் அந்த வாலிபன், எகிப்தின் கமால் அப்துல் நாசரை வாசித்தான்; சீனாவின் மாவோவை படித்துப் பார்த்தான். அப்பொழுது அவனின் வயது இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தான்! சிறுபிள்ளை விவசாயம் வீடு வந்து சேராது என்று பெரியவர்கள் இளையவர்களை மட்டம் தட்டி வைப்பதை அந்த இளைஞனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கல்லூரிப் படிப்பை முழுமையாக முடிக்காமல் இராணுவ வேலைக்குப் போனான். போனவுடன் தலைமைப் பதவியா கொடுப்பார்கள்? மூன்றாம் நிலைதான். அடுத்தவர்கள் தனது தலைவிதியை நிர்ணயிப்பதை அந்த “”இளம் ரத்தம்” ஏற்றுக் கொள்ளவில்லை. தனது 27 வயதில் தானே தன் முன்னேற்றத்திற்கு அயராது உழைக்க ஆரம்பித்தான்.
அனைவரிடம் பேசினான்! மன வலிமையையும் புத்திக் கூர்மையையும் பிரயோகித்து இரத்தம் சிந்தாமல் ஒரு தேசத்தையே தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தான்.
அறிவித்த நாள் செப்டம்பர் 01,1969,
அந்த தேசத்தின் பெயர்: லிபியா,
அந்த மாவீரனின் பெயர் : முஅம்மார் கடாஃபி.
மரியாதைக்குரிய கடாஃபி அவர்களின் வரலாற்றை நான் எழுதவில்லை. நிறைகளும், சாதனைகளும், வீரமும் மிகுந்த அந்த மனிதனிடம், குறைகளும், பிழைகளும் இருந்தன. அதனால்தான் அவர் சறுக்கிக் கொண்டிருந்தார். இன்று மார்ச் 01-2011 கிட்டத்தட்ட கடைசிக் கட்டத்தில், விளிம்பில் நிற்கிறார் அந்த மாவீரர். “மாவோ’வை வாசித்த இந்த மனிதர் ஏன் “உமரை’ மறந்தார்? இதுதான் எனது சந்தேகம்! என்ன செய்வது? பிழை செய்தால் விலை கொடுப்பது என்பதுதானே வரலாறு.
கடாஃபி என்னென்ன செய்து தன் தேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்? என்னென்ன விசயத்தில் கட்டுப்பாட்டை இழந்தார் என்பதை கொஞ்சம் பார்ப்போம்!
மது, மாது, சூது இல்லாத அற்புத தேசம் லிபியா!
மதுக் கடைகள் திறந்தால்தான் அரசின் கஜானா பெருகும் என்று பல நாடுகள் பட்ஜெட் தயாரிக்கிறார்கள். ஆனால் லிபியாவில் மதுவும் கிடையாது, மதுக்கடையும் கிடையாது.
பாவங்களின் தாய் எனப்படும் மதுவையும் ஒழித்து, பெரும்பாவங்களில் முக்கியமான விபச்சாரத்தையும் இல்லாமல் வைத்திருந்தது கடாஃபியின் சாதனை என்றால் மிகையாகாது.
அது போலவே பணம் வைத்து விளையாடும் சூதாட்டங்களே கிடையாது.
பெரும்பாலான ஊர்களில் (நவீன அடுக்கு மாடி வீடுகள் தவிர) அனைத்து வீடுகளிலும் (காம்பவுண்ட்) மதில் சுவர் 8 அடி முதல் 10 அடி உயரம் வரை இருக்கிறது. வீட்டில் உள்ள பெண்களை அந்நியர் யாரும் வெளியிலிருந்து நோட்டம் விட முடியாத நல்ல சிஸ்டம், முஸ்லிம் அல்லாதவர்கள் இதனை “”பெண்கள் கொடுமை” என்பார்கள். அதே சமயம் தனது சகோதரியோ, தாயோ, மகளோ, அடுத்தவன் கண்களால் மேயப்படுவதை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனைத்தானே கடாஃபியின் அரசு கண்காணித்து வந்தது!
எல்லாம் நன்றாகத்தானே போய்க் கொண் டிருக்கிறது. எங்கே கடாஃபி இடறினார்? ஏன் இந்த மாவீரர் இன்று பலமிழந்து நிற்கிறார்?
அவரின் குறைகளை படிக்குமுன் அவரது அரசு குடிமக்களுக்கு என்ன செய்தது என கொஞ்சம் பார்ப்போமா?
கடாஃபி அவர்கள் எந்த மாட மாளிகையிலும், பங்களாவிலும் இன்று வரை வசித்ததில்லை. “ராணுவ டெண்ட்’ எனப்படும் கூடாரம் தான் அவரது வீடு. இன்றுவரை அவர் பேணிவரும் அவரது எளிமைதான் 40 வருடமாக மக்கள் மனதில் இருக்கிறது.
மத்திய தரைக்கடல் கடற்கரைதான் லிபியாவின் மேற்கு எல்லை. கிரிஸ், இத்தாலி எல்லாம் கைக்கெட்டும் தூரம். தெற்கில் இருந்து அடிக்கடி வீசும் சஹாரா மணல் புழுதிக் காற்று மட்டும் இல்லையென்றால், லிபியாவை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!
அப்படிப்பட்ட பூகோள அமைப்பு!
2010-ல் பெங்காசி நகருக்கு அருகில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருப்பதால் பல அனுபவங்களை நேரில் அறியக்கூடிய வாய்ப்பு இறையருளால் கிட்டியது.  பெரும்பாலும் கடற்கரை ஓரத்தில் உல்லாச விடுதிகள் கட்டுவதுதான் எல்லா நாடுகளும் செய்கின்றன. கடாஃபிக்கு இதில் உடன்பாடு இல்லை. அது மேற்கத்திய கலாச்சாரத்துக்கு வழிவிடும் என்று எச்சரித்தார்.
கடற்கரையில் ஆண்கள் அமர தனி பகுதி! பெண்களுக்கு தனி பகுதி! குடும்பமாக அமர வேண்டுமா? அதற்கும் தனி பகுதி! இதெல்லாம் கடாஃபியின் ஒழுக்க மேம்பாட்டு திட்டங்களுக்கு உதாரணங்கள்!
கடற்கரைக்கு வந்து தங்கி அடுத்தவர் வீட்டு பெண்களை ரசிக்கும் மனோநிலை உள்ள சுற்றுலா பயணிகள் லிபியாவை பற்றி “What a hell”  என்று சபிப்பார்கள்!
லிபியாவின் எண்ணெய் வளம்தான் கடாஃபியின் பலமும், பலவீனமும். இது மனித இயல்பும் கூட. கை நிறைய காசிருந்தால் உழைத்து சாப்பிட மனம் அவ்வளவாக முன்வராது! கடாஃபி எண்ணெய் வளத்தை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டார். “”இருக்கிறது” எல்லோரும் சாப்பிடுங்கள் என்று சொல்லி நாடு முழுவதும் மாதா மாதம் உதவித் தொகைகள் குடும்பங்களை தேடி வந்தன.
வேலைக்கு போகாமல் சாப்பிடும் மனோ நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே வந்தது. இது மக்களின் நிலை. அதை நாடி பிடித்து தலைவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய “”அதிகார வட்டம்” தலைவருக்கு ஜால்ரா அடித்து, புறங்கையில் வடிந்த தேனை நக்கியது, அதனால் அடித்தட்டு மக்கள் மேலும் மேலும் கீழ்நிலையிலேயே இருந்தார்கள்.
லிபியா வரலாறு கொஞ்சம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல! வரலாற்றின் பக்கங்களிலும் முக்கிய இடம் உண்டு. பண்டைய கிரேக்க சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரம் லிபியாவில்தான் உள்ளது. பெயர்: சைரின், சிதைந்து போன அடையாளங்களுடன் கூடிய அந்த வரலாற்று சிறப்புமிக்க நகரை இன்றும் காணலாம்.
முழு அரபுலகத்திற்கும் அவதார புருஷனாக வரவேண்டும் என நிறையக் கனவு உண்டு அவருக்கு! அதனால்தானோ, என்னவோ, அடிக்கடி அமெரிக்காவை சாடுவதும், திட்டுவதும் அவரது வழக்கமான பாணியாகவே இருந்தது. அதே சமயம் இந்த பேச்சு தம் தேசத்து மக்களிடம் தனக்கு மதிப்பையும் உயர்த்தி தந்து கொண்டே இருந்தது!
ஆனால் எந்த அரபு நாடும் கடாஃபியை தலைவர் என்றோ, குறைந்தபட்சம் ஒருங்கிணைப்பாளர் என்றோ கூட கருதியதில்லை. கடாஃபியும் தன் நாட்டை இஸ்லாமிய நாடு என்று இன்று வரை கூறியதே இல்லை! முஸ்லிம் நாடு என்றுதான் கூறுவார்.
2008ல் ஆப்பிரிக்காவில் உள்ள சுமார் 200 மன்னர்களை அழைத்து விருந்து போட்டு, தன்னை “KING OF KINGS” என்று சொல்ல வைத்தார். சமீப காலமாக நல் உறவாடி வந்த மேற்குலகம் கடாஃபியை சந்தேதிக்க ஆரம்பித்து விட்டது. ஏன் என்றால் “United States of Africa” என்று கடாஃபி வலியுறுத்தியதாக கூட இருக்கலாம்.
கடந்த காலங்களில் அமெரிக்காவால் பல தடவை லிபியா குறி வைக்கப்பட்டது. பிற காரணங்களால் அவை தள்ளி போயின. அது ஆப்கானாக இருக்கலாம் அல்லது சதாமாக இருக்கலாம்.
கடாஃபி இஸ்ரேலுக்கு எதிராக PLO விற்கு நிறைய உதவி செய்து ஆதாரித்தார். பல ஆப்பிரிக்க நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பது கடாஃபிக்கு காப்பி குடிப்பது போல. இதன் விளைவை 1986ல் சந்திக்க ஆரம்பித்தது லிபியா நாடு. பெர்லினில் உள்ள இரவு விடுதி ஒன்றில் அமெரிக்க ராணுவ வீரர் இரண்டு பேர் பலியானதற்கு கடாஃபிதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. திரிபோலி, பெங்காசி நகர்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டு வீசி 60 பேரை கொன்றது. இந்த தாக்குதலில் கடாஃபியின் வளர்ப்பு மகள் பலியானார். (கடாஃபிக்கு 1மகள் + 8 மகன்கள்)
அடுத்தடுத்து ஸ்காட்லாந்து ட்சாட் நாடுகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும் கடாஃபிக்கும் தொடர்பு உண்டு என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கிடையில் எந்த உலக நாட்டு உதவியும் இல்லாமல், உலக வங்கியிடமும் சொல்லாமல் உள்நாட்டில் மிகப்பெரிய வேலை ஒன்றை செய்தார் கடாஃபி. அதாவது பெரும்பகுதி பாலைவனம்.
லிபியா மொத்த பரப்பளவு : 1759540 Km2  (தமிழ் நாட்டைப் போல 14 மடங்கு கூடுதல் பரப்பளவு)
உணவுத் தேவைக்கு உயிர்நாடி விவசாயம்; விவசாயத்துக்கு தேவை தண்ணீர். நம்மிடம் எண்ணெய் வளம் உள்ளது. ஆறுகளே கிடையாது. இருக்கும் பணத்தைக் கொண்டு அடுத்த நாட்டில் கையேந்தாமல் சொந்த மண்ணில் பாலைவனக் காடுகளில் நீர்நிலை ஆதாரங்களை கண்டுபிடித்து ராட்சத போர் போட்டார். செயற்கை ஆறை உருவாக்கினார்.
Man Made River என்று பெயர் (GMRA Project) எண்ணெய் வள நாடுகளில் பெரிய பெரிய Projects  செய்யும் Brown & Root  நிறுவனம் டிசைன் செய்து தென்கொரிய கம்பெனி உதவியால் பாலைவன மணலைக் கிழித்து, ராட்சத பைப்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இன்று கிட்டத்தட்ட 6000 கி.மீ. நீள இந்த ஆற்றின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. கட்டிடப் பொறியியல் துறை வல்லுனர்கள் உலகளவில் இந்த ஆற்றிற்கு சூட்டிய பெயர் “எட்டாவது உலக அதிசயம்’ (8th Wonder of the World)
அமெரிக்கா கூட்டிக் கழித்துப் பார்த்தது. கடாஃபியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். இல்லையயன்றால் ஆபத்து என்று நினைத்திருக்க வேண்டும்.
ஆனால் கடாஃபி அமெரிக்காவை திட்டுவார், இஸ்ரேலை திட்டுவார், அவ்வளவுதான் தன் நாட்டைவிட்டு எங்கும் போகமாட்டார். இருப்பினும் லிபியாவின் வளர்ச்சி அமெரிக்காவை கவலை கொள்ள வைத்தது. 1990களில் லிபியா மீது பொருளாதார தடை. பல்வேறு நெருக்கடிகள் லிபியா மீது. கடைசியில் இரண்டு லிபிய கைதிகளை ஒப்படைத்தால் பரிகாரம் உண்டு என்று அமெரிக்கா கூறி கடாஃபியை நிர்பந்தித்தது. நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்கு பின் இரண்டு குற்றம் சாட்டப்பட்ட லிபியர்களை ஒப்படைத்தார். (அந்த குடும்பங்களுக்கு $ 2.7 பில்லியன் கொடுத்து உதவினார் என்று சொல்கிறார்கள்)
வழக்கம்போல இரசாயன ஆயுத கிடங்கு லிபியாவில் உள்ளது என்று கூட பென்டகன் குற்றம் சாட்டியது. கடைசியில் அதெல்லாம் வீட்டு மனை கட்டிட வேலைகள்! வயதிற்கு வந்த ஆண்/பெண் திருமணம் முடிக்காமல் இருந்தால் (அல்லது) தாமதித்தால் குழப்பம் விளையும் என்று நபி(ஸல்) சொன்ன ஹதீஸ் இருப்பதாக பயானில் கேட்டதுண்டு!
தமிழ்நாட்டு ஒரு பாமர முஸ்லிமாகிய என் காதில் விழுந்த இந்த பொன்மொழி எப்படி அரபியான கடாஃபியின் செவிகளை தொடவில்லை?
கலீஃபா உமர்(ரழி) அவர்களின் நாட்களில் அம்ர் இப்னுஅல்ஆஸ்(ரழி) அவர்களின் மேற் பார்வையில் வட ஆப்பிரிக்கா முழுவதும் இஸ்லாம் பரவியதாக வரலாற்றில் படித்ததுண்டு.
கலீஃபா உமர் அவர்கள் இரவில் மாறு வேடம் பூண்டு தன் தேசத்தில் உள்ள கீழ்நிலை மக்களின் பொருளாதார நிலைகளை தானே கண்டதை ஏன் கடாஃபி மறந்தாரோ, தெரியவில்லை. விளிம்பு நிலை சமூகம், ஏழை சமூகம் பரவலாக லிபியா முழுவதும் உள்ளார்கள். குறிப்பாக “மஹர்’ விசயத்தில் பெண்கள் போதிய வழிகாட்டுதல் இல்லாததாலோ என்னவோ, சொந்த வீடு இல்லாத ஆண்களுக்கு அவ்வளவு சுலபமாக திருமணம் நடந்துவிடாது. 35, 40 வயது வரை ஆண்கள் திருமணம் முடிக்காமல் உள்ளனர்.
இந்த விஷயம் “நாட்டின் தலைவர்’ என்ற முறையில் கடாஃபி தீர்வு காணாத வரலாற்றுத் தவறு என்று நான் கூற விரும்புகிறேன்.
இரண்டாவது வரலாற்று தவறு என்னவென்றால் 1980, 1990களில் உலகம் முழுவதும் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. தொழில் நுட்பம், கல்வியியல், கணினி என்று புதிய தலைமுறை தலையெடுக்கும்போது, கடாஃபி 1960களில் தான் எழுதிய Green Book விலிருந்து வெளியே வராதது கடாஃபி செய்த பெரும் பிழை. அதன் விலை 2011 பிப்ரவரி 17ல் வெடிக்க ஆரம்பித்தது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக, போதை வஸ்துக்களான பீர், பிராந்தி விஸ்கியை என்னவென்றே தெரியாத லிபிய இளைஞர்கள் மத்தியில் இலை மறைவு காய் மறைவாக கடந்த ஆண்டுகளில் போதைப் பொருட்கள் புழங்க ஆரம்பித்துள்ளன. 35,40 வயது வரை திருமணம் ஆகாத இளைய தலைமுறை இந்த சாத்தானிய வலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபட ஆரம்பித்துள்ளது. அதேபோல விபச்சாரம் கடந்த சில ஆண்டுகளில் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது.
இந்த சமூக பிரச்சினையை நேர்மையாக சிந்தித்துத் தீர்ப்பதுதான் பொறுப்புள்ள தலைமையின் பணி. இதை விட்டுவிட்டு இது என் மக்களை வழிகெடுக்க அந்நிய நாட்டின் சதி என்பதெல்லாம் சும்மா வெட்டிப் பேச்சு.
எது எப்படியோ எல்லா நாட்டிலுமே அரசாங்கத்தை வெறுப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தலைமையை விமர்சிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் எது சாக்கு என்று காத்திருப்பார்கள்! அவர்கள் யார் தூண்டினாலும் சிக்குவார்கள் சதி செய்ய! அப்படிப்பட்ட கூட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது.
அவர்களிடம் கீழ்காணும் அம்சங்கள் காட்டப்பட்டிருக்கலாம்.
1. கடாஃபியின் மகன்களை பார், ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலாகா மந்திரி; உன்னைப் பார், நீ ரொட்டிக்கே அல்லாடுகிறாய்.
2. எல்லா நாட்டிலும் ஆங்கிலம் பேசுகிறார்கள். உனக்கோ அரபியே அரைகுறை! உன் சந்ததி எப்படி உருவாகும் இப்படி இருந்தால்?
3. பக்கத்து நாடுகளைப் பார்! பாரிசைப் பார்! ரோமைப் பார்! மால்டாவைப் பார்! அட பக்கத்திலுள்ள கெய்ரோவைப் பார்! எவ்வளவு சுதந்திரம்! அப்பப்பா.
உன் தலைவிதி இப்படியா?
4. கடந்த காலங்களில் இதையயல்லாம் பல நண்பர்கள் பேசினார்கள்! அவர்கள் எல்லாமே இன்று சிறைகளில்! அல்லது கப்ரில்!
எப்பொழுது விடியல்?
இப்படித்தான் லிபியா மட்டுமல்ல, அரபு தேசம் முழுவதும் கலகக் குரல்கள் விதைக்கப்படுகின்றன. கலகக்காரர்கள் தங்களை போராட்டக்காரர்கள் என்கிறார்கள். அல்ஜசீரா சுடச் சுட சேதி சொல்வதில் குறியாக உள்ளது.
BBC யும், CNN ம் அந்த போராட்டக்காரர்களை சுதந்திர போராட்ட தியாகிகளாக காண்பிக்கிறது. எல்லா நாடும் வேடிக்கை பார்க்கிறார்கள்! எல்லா எண்ணெய் நாடுகளிலும் சம்பாதித்தார்கள். இன்றோ யாரும் தீர்வு பற்றி பேசுவதே இல்லை.
01.03.2011 இன்று அமெரிக்க போர்க்கப்பல் லிபியாவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று சர்வதேச கோர்ட்டில், கடாஃபி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முந்தா நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. காய்கள் எப்படிக் கவனமாக நகர்த்தப்படுகிறது என்பதை கவனித்தால் ஒன்று புரிகிறது. கடந்த காலங்களில், ஈராக்கில், ஆப்கானில் எல்லாம் நிறைய செலவு செய்து, உயிர் இழப்பு செய்து கைப்பற்றிய ஃபார்மூலாவை மாற்றி உள்ளூரில் உள்ள கலகக்காரர்களை கொஞ்சம் உசுப்பேத்தி போராட வைத்தால் போதும்.
ரீகன், புஷ். கிளிண்டன் ஃபார்மூலாக்கள் போய் ஒபாமா ஃபார்மூலா வந்துள்ளது. காரியம் முடிய கனவில் உள்ளார்கள். இறைவனின் கணக்கு வேறாக இருக்கும் என்பதே எமது துஆவாகும்.
May 31-2002-_ Indian Express-ல் வந்த செய்தி:
இந்தியாவிலிருந்து ஒரு குழு லிபியா போய் கடாஃபியை நேரில் பார்த்து பேசியது. பூரி சங்கராச்சாரியர், மெளலான ஆஸாத் மதனி, தலித் தலைவர் உதித்ராஜ் மற்றும் பல அறிஞர்கள் தலைவர்களுடன் சில தேவ்பந்த் உலமாக்களும் அந்த குழுவில் அடக்கம்.
அவர்களிடம் கடாஃபி சொன்ன சேதி இதுதான். அமெரிக்கா கடந்த காலத்தில் ஈரானையும் ஈராக்கையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தது. இப்பொழுது இந்தியாவையும் பாகிஸ்தானையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்க விரும்புகிறது.
இந்த சதித் திட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் விழுந்து விட்டது எப்படி?
மேலும் கடாஃபி கூறினார், கடவுளின் பெயரைக் கூறி சமுதாயத்தில் சண்டை மூட்டுவது (Dividing people in His name) மோசமான பாவம்.
நிறைவாக கடாஃபி சொன்னாராம்,
“நான் இந்தியா வந்தால், அனைத்து மக்களையும் அழைத்து அமைதி வேண்டி தொழுகை நடத்துவேன்’.
மீடியாக்களில் கொடுங்கோலனாக சித்தரிக்கப்படும் கடாஃபியின் மென்மையான உன்னதமான உள்ளம் உண்மையானது.
என்ன செய்வது, இன்றோ பலர் அந்த கடாஃபிக்கு “ஜனஸா தொழுகை’ எப்படி எங்கே நடத்துவது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்!
இறைவன் மகா பெரியவன்! கருணையாளன்!

அர்ஷின் கீழ் நிழல் பெறும் அந்த ஏழு கூட்டத்தினர்


அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமே இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்கு மட்டும் அர்ஷின் நிழலில் நிழல் கொடுப்பான். நீதியான அரசன், அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்த (ஊரி திளைத்த) வாலிபன், பள்ளியோடு உள்ளம் தொடர்புள்ள மனிதன், இருவர் அல்லாஹ்விற்காக நேசித்து ஒன்றிணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறிய(ஒதுங்கிக் கொண்ட)வர், வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர், தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
குறிப்பு: மேல் கூறப்பட்ட தன்மையுள்ளவர்கள் ஈமானில் முழுமை அடைந்தவர்களால் மாத்திரமே முடியும், ஆகவே நாமும் அப்பண்புள்ளவர்களாக வாழ முயற்சிப்போமாக.
மஹ்ஷர் வெளியின் அகோரம்
மஹ்ஷர் வெளியென்பது கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளாகும். அங்கே சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் தூரத்தில் நெருங்கியிருக்கும், மனிதர்கள் ஆடையில்லாதவர்களாக, செருப்பில்லாதவர்களாக, அவரவர் செய்த பாவத்திற்கிணங்க,வேர்வையில் மூழ்கியவர்களாக இருப்பார்கள்.
பின்வரும் ஹதீதுகள் அதை தெளிவு படுத்துகின்றது,
சூரியன் மனிதர்களுக்கு ஒரு மயில் அளவு நெருங்கி விடும், மனிதர்கள் செய்த தவறளவுக்கு வேர்வை அவர்களை அடைந்துவிடும், சிலருக்கு அவர்களின் கரண்டை அளவுக்கும், சிலருக்கு அவர்களின் முட்டுக்கால் வரையிலும், சிலருக்கு அவர்களின் இடுப்புவரையிலும், சிலருக்கு வாய்வரையிலும் வந்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பூமியில் எழுபது முழம் செல்லும் அளவு மறுமையில் மனிதர்களுக்கு வேர்வை ஏற்படும், அவர்களின் வேர்வை அவர்கள் காதுவரை மூடிவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
தன் வாழ்நாளை எப்படி கழித்தார், தான் கற்ற அறிவைக் கொண்டு என்ன செய்தார், தன் பணத்தை எங்கிரிந்து சம்பாதித்தார் இன்னும் எப்படி செலவளித்தார், தன் உடம்பை எதில் அற்பணித்தார் என்ற, நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை நாளை மறுமையில் ஒரு அடியானின் இரு கால் பாதங்களும் (அவர் நிற்கும் இடத்தை விட்டும்) நகராது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(திர்மிதி)
இவ்வளவு இக்கட்டான சூழலில்தான் ஏழு கூட்டத்திற்கு மட்டும் தன் அர்ஷின் நிழலில் அல்லாஹ் நிழல் கொடுப்பான், அக்கூட்டத்தின் தன்மைகளை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

1. நீதியான அரசன்:

அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்;. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்;. நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58.
மக்கா வெற்றிபெற்ற போது உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களிடம் இருந்த கஃபத்துல்லாவின் சாவியை நபி (ஸல்) அவர்கள், அவர்களிடமிருந்து எடுத்திருந்தார்கள், கஃபத்துல்லாவிலிருந்து வெளியில் வரும் போது மேல்கூறப்பட்ட ஆயத்தை ஓதியவாறு உத்மான் இப்னு மள்ஊன் (ரலி) அவர்களை அழைத்து அச்சாவியை அவர்களிடமே ஒப்படைத்து விட்டார்கள். இந்த ஆயத்திலே அல்லாஹ் அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் மக்களுக்கு மத்தியில் தீர்ப்பு வழங்கினால் நீதமான முறையில் தீர்ப்பு வழங்குமாறும் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகின்றான்.
நீதமென்பது: தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும் என்பதற்காகத்தான், குறைவான ஈமான் உள்ளவர் அரச பதவியில் இருக்கும் போது நீதியாக தீர்ப்பளிக்கமாட்டார் இன்றைய உலகத்தின் நடைமுறைகள் அதற்கு சான்றாக இருக்கின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், தனது தீர்ப்பிலும் தனது குடும்பத்திலும் அவர்கள் பொறுப்பேற்றவைகளிலும் அல்லாஹ்விடத்தில் நீதம் செலுத்துபவர்கள் கண்ணியத்திற்குரிய அர்ரஹ்மானின் வலது புறத்திலிருக்கும் ஒளியிலான மிம்பர் மேடையில் வீற்றிருப்பார்கள், அல்லாஹ்வின் இரு கரங்களும் வலதுபுறத்திலுள்ளவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2. அல்லாஹ்வின் வணக்கவழிபாட்டில் உருவான வாலிபன்

வாலிப வயது என்பது, மனிதன் தன் வாழ்வில் பெறும் மிக முக்கிய கட்டமாகும். அந்த வயதில் மனிதன் சகல உடல் ஆரோக்கியத்தையும் பெற்று கம்பீரமாக வாழும் வயதாகும். அந்த வயதில்தான் மனிதனின் உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று சுறுசுறுப்பாக வாழும் வயதாகும். எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகும் வயதாகும். அதுவும் இந்த காலத்தைப்பற்றி கூறத்தேவையில்லை. இப்படிப்பட்ட பல எண்ணங்கள் உருவாகும் வயதிலும் அல்லாஹ்வைக்கு அடிபணிந்து நடக்கும் வாலிபனும் அந்த அர்ஷின் நிழலில் வீற்றிருப்பான். தங்களின் ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்காக குகைக்கு சென்ற வாலிபர்களை பற்றி அல்லாஹ் திருமறையில் புகழ்ந்து கூறுகின்றான்.
(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறாரோ, அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் ”எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் – தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம். 18:9-13
இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கூறினார்கள். ஐந்துக்கு முன் ஐந்தை பயன்படுத்தி கொள்ளுங்கள், உன்னுடைய வயோதிபத்துக்கு முன் உன் வாலிபத்தையும், நீ வேலையுள்ளவராக ஆகுவதற்கு முன் உன் ஓய்வையும், உன்னுடைய மரணத்திற்க்கு முன் உன் வாழ்வையும், உன்னுடைய நோய்க்கு முன் உன் ஆரோக்கியத்தையும், உன்னுடைய வறுமைக்கு முன் உன்னுடைய செல்வத்தையும் (மறுமைக்காக) பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்) இந்த ஹதீதிலும் வாலிபம் இடம் பெற்றிருப்பது வாலிப வயதின் முக்கியத்துவத்தை காட்டுகின்றது.

3. பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்

பள்ளிக்குள் இருப்பதில் அமைதி பெறுபவர் ஒரு உண்மையான முஃமின். மனிதன் என்பவன் உலகத்தேவைகள் உள்ளவன், அவனுக்கு குடும்பம் என்றும் தொழில் என்றும் பல உலகத்தேவைகள் இருக்கின்றது. பள்ளிக்குள்ளேயே தனது வாழ்நாளை கழிக்கமுடியாது என்பதால், பள்ளிக்குள் வந்த அந்த மனிதன் தனது உலக வாழ்க்கைத் தேவைக்காக வெளியில் செல்லத்தான் வேண்டும். பள்ளியிலிருந்து வெளியில் சென்றதும் மீண்டும் பள்ளிக்குள் வந்து அந்த ஈமானிய அமைதியை எப்போது பெறுவதென்றே எண்ணிக் கொண்டிருப்பார். தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட மீன் மீண்டும் தண்ணீருக்குள் செல்வதற்கு துடிப்பது போல், பள்ளியிலிருந்து உலகத் தேவைக்காக வெளியில் சென்ற முஃமின் மீண்டும் பள்ளிக்குள் வருவதற்கு ஆசைப்படுவான். இது ஒரு உண்மையான முஃமினைத்தவிர வேறு யாரிடமும் இருக்க முடியாது. உண்மையான முஃமின் அல்லாதவர், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போன்று பள்ளிக்குள் இருப்பார், கூட்டில் அடைக்கப்பட்ட பறவை, தன்னை எப்போது திறந்து விடுவார்கள், பறந்து விடலாம் என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கும். அவ்வாறே உண்மையான முஃமின் அல்லாதவரும் பள்ளிக்குள் தொழுகைக்கு வந்ததும், இமாம் சின்ன சூரா ஓதமாட்டாரா என்று நினைப்பதும், எப்போது ஸலாம் கொடுத்து தொழுகையை முடிப்பார் என்று எதிர்பார்த்திரிந்து இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
இமாம் தொழுகையை முடித்ததும், பள்ளிக்குள் ஏதோ விபத்து நடந்து விட்டது போன்று அவசர அவசரமாக பள்ளியை விட்டும் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். இப்படி செய்வதை வழமையாக்கிக் கொண்டவர்கள் இதைமாற்றி அமைக்க வேண்டும். பர்ளான தொழுகை முடிந்ததும் அதற்குப்பிறகு ஓதக்கூடிய அத்காருகளை ஓதி முடித்த பின், சுன்னதுக்களைத் தொழுது அல்லாஹ்விடத்தில் தன் தேவைகளைக் கேட்டு, அங்கு மார்க்க உரைகள் செய்யப்பட்டால் அதில் கலந்து கொள்வதோடு திருமறை குர்ஆனை ஓதும் வழக்கத்தையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்படி, பள்ளியில் அமர்ந்து அமைதியை பெறுவார் உண்மையான முஃமின்.
பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது.
யார் காலையிலோ அல்லது மாலையிலோ பள்ளிக்குச் செல்கின்றாரோ அவருக்காக காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்காக ஒரு இடம் தயார் செய்யப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

4. இருவர் அல்லாஹ்விற்காகவே நேசித்து ஒன்று சேர்ந்து, அல்லாஹ்விற்காகவே பிரிந்தவர்கள்

இன்று மனிதர்களில் அதிகமானவர்கள் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் உலகத்தை மையமாக வைத்தே. ஒருவரால் ஏதும் கிடைக்குமென்றிருந்தால் அவருடன் நேசிப்பார்கள், அது கிடைக்கவில்லையெனில் அந்த நேசத்தை முடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு முஃமின் அப்படி இருக்கமாட்டார். அவர் ஒருவரை நேசிப்பதும் கோபிப்பதும் அல்லாஹ்விற்காகவே இருக்கும். ஒரு மனிதன் மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்பதை பார்க்கும் போது அவரை நிச்சயமாக ஒரு முஃமின் நேசிப்பான், அவர் இவருடைய சொந்தக்காரராக இருந்தாலும் சரி, அல்லது சொந்தம் இல்லாதவராக இருந்தாலும் சரியே, அதே நேரத்தில் அவரிடத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான பண்புகளை பார்க்கும் போது அவரை வெறுக்கவும் செய்வார் இதுவே ஒரு உண்மையான முஃமினின் பண்பாகும்.
யார் அல்லாஹ்விற்காக நேசித்தும் கோபித்தும் இன்னும் அல்லாஹ்விற்காக கொடுக்கவும் தடுக்கவும் செய்கின்றாரோ அவர் ஈமானை முழுமையாக்கிக் கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

5. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறியவர்(ஒதுங்கிக் கொண்டவர்)




காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார். இன்று முஸ்லிம்களில் பலர், ஆபாச சேனல்கள், பிலிம்கள் சீடிக்களின் மூலம் உல்லாசமாக? வலம் வருகின்றார்கள், அதை அரிய வாய்ப்பாகவும் கருதுகின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த ஹதீதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். அன்னிய பெண்கள் விஷயத்தில் ஒரு முஃமின் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும். அது நேரடியாக இருந்தாலும் சரி அல்லது பிலிமாக போட்டாவாக இருந்தாலும் சரியே.
அதிகமான ஆண்கள் பெண்கள் மூலமே தவறில் வீழ்ந்து விடுகின்றார்கள்.
எனக்குப் பின் ஆண்கள் மீது மிகவும் ஆபத்தான குழப்பம் தரக்கூடிய ஒன்றாக பெண்களைத் தவிர வேறு எதையும் நான் விட்டுச்செல்லவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
குகையில் நுழைந்த மூவரின் சம்பவத்தையும் வாசகர்கள் நினைவில் கொண்டுவருவது பொருத்தமாக இருக்கும்.
ஆகவே பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சி நடப்போமாக!
பிலிம்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதும் குறிப்பாக ஆபாச பிலிம்கள் மற்றும் மொபைல் மூலம் ஒருவருக்கொருவர் ஆபாசப்படங்களை அனுப்பி வைப்பதும் இன்று மிக அதிகரித்துவரும் காலமாகும். இதனால் வழிகெட்டுப் போகின்றவர்களுக்கு கிடைக்கும் பாவத்தில் இவருக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும். இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், இப்படிப்பட்ட அனாச்சாரத்தில் நமது சமூகம் மூழ்கியிருப்பது மனவேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்துகின்றது.

6. வலது கரம் கொடுக்கும் தர்மத்தை இடது கரத்திற்கு தெரியாமல் மறைமுகமாக தர்மம் கொடுத்தவர்

இடது கை கொடுக்கும் தர்மத்தை வலது கை தெரியாமல் கொடுப்பதென்பதின் கருத்து, உள்ளத் தூய்மையுடன் தர்மத்தை கொடுப்பதென்பதாகும்.
மறைமுகமாக செய்யும் தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
இங்கு தர்மத்தை குறிப்பாக சொல்லப்பட்டிருந்தாலும் எல்லா அமல்களையும் உள்ளத் தூய்மையுடன் செய்யவேண்டும் என்பதை இது குறிக்கின்றது. அமல்களை குறைவாக செய்தாலும் அல்லாஹ்விற்காக செய்ய வேண்டும். அதுவே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து (அழுது) கண்களால் கண்ணீர் வடித்தவர்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள், தவறு செய்தவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்பு தேடுபவர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஃஜமுஸ்ஸகீர், தப்ரானி)
பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று, தான் செய்த பாவத்தை நினைத்து கவலைப்பட்டு அதற்காக கண்ணீர் வடிப்பது.
இங்கு உண்மையான தவ்பாவின் நிபந்தனைகளை ஞாபகமூட்டுவது பொருத்தமாக இருக்கும், அவைகள் பின்வருமாறு.
ஏற்றுக் கொள்ளப்படும் தவ்பாவின் நிபந்தனைகள்
பிழை பொறுப்பு தேடுபவரிடம் இருக்க வேண்டிய நிபந்தனைகள்,
1. உள்ளத் தூய்மையுடன் பிழை பொறுப்பு தேடவேண்டும்.
2. செய்த பாவங்களை முற்றாக விட்டுவிட வேண்டும்.
3. அதற்காக கவலைப்பட வேண்டும்.
4. இனிமேல் அத்தவறை செய்யமாட்டேன் என அல்லாஹ்விடம் உறுதி மொழி கொடுக்க வேண்டும்.
5. மரணத்திற்கு முன் பாவமன்னிப்பை செய்ய வேண்டும், மரண நேரத்தில் செய்யப்படும் பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். (இவைகள் அல்லாஹ்விற்கும் அடியானுக்கும் மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கான நிபந்தனைகளாகும்)
6. அடியார்களுக்கு செய்த தவறாயின், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அது ஒரு பொருளாக இருந்தால் உரியவரிடம் திருப்பி கொடுத்திட வேண்டும்.  இவைகள் ஏற்றுக்கொள்ளப்படும் பிழைபொறுப்பின் நிபந்தனைகளாகும்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அழுது புலம்பி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்பதால் நம்மை நரகமே தீண்டாது.
அல்லாஹ்வின் பயத்தால் அழுத கண், அல்லாஹ்வின் பாதையில் விழித்திருந்து பாதுகாத்த கண் (இவ்விரு கண்களையும்) நரகம் தீண்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)
நபி (ஸல்) அவர்களும் முன் சென்ற நல்லவர்களும் அல்லாஹ்வின் பயத்தால் அதிகம் அழக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
நாம் செய்த பாவங்களை நினைத்து, அல்லாஹ்விடம் அழுவோமாக!
அன்புள்ள சகோதர சகோதரிகளே! மேல் கூறப்பட்ட ஏழு கூட்டத்தவர்களின் பண்புகளை நாமும் பெற்றவர்களாகவே வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நிச்சயம் உதவி செய்வான். அதற்கு முடியாத பட்சத்தில் ஒரு கூட்டத்திலாவது நம்மை நாம் இணைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அதற்கு வாய்ப்பளிப்பானாக!

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.