Jun 6, 2011

நாவின் விபரீதம்

அல்லாஹ் மனிதனுக்கு எத்தனையோ அருட்கொடைகளை அளித்திருக்கின்றான். அவைகளில் மிக முக்கியமானது பேசும் நாவாகும். நாவை ஒரு கூரான கத்திக்கு ஒப்பாகக் கூறலாம். கத்தியைக் கொண்டு ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து, அவரின் உயிரைப் பாதுகாக்கவும் செய்யலாம். அதே கத்தியைக் கொண்டு ஒருவரின் உயிரை எடுத்தும் விடலாம். இதே போன்றது தான் நாவும். நாவைக் கொண்டு சொர்க்கம் செல்லவும் முடியும். அதே நாவு நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகவும் அமையலாம். ஆகவே நாவை பேணிப் பாதுகாப்போம்.


மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாகத் திகழ்வது நாவு என்று சொன்னால் அது மிகையாகாது. இதை எப்படி நாம் பயன்படுத்துகிறோமோ அதன் படியே முடிவும் இருக்கும். சிலர் இந்த நாவை சரியாகப் பயன்படுத்தி மனிதர்களில் ‘சிறப்பிடத்தைப்’ பெற்று விடுகிறார்கள். சிலர் இதே நாவை முறையற்ற வழியில் பயன்படுத்தி ‘மனிதர்களில் தரம் தாழ்ந்தவர்கள்’ பட்டியலில் இடம் பெற்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட நாவைப் பற்றி திருக்குர்ஆனும் நபி மொழியும் என்ன கூறுகின்றன என்பதைக் காண்போம்.


‘எதைப் பற்றி உமக்கு ஞானமில்லையோ அதைப் பின்பற்ற வேண்டாம்! நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலன், பார்வை இதயம் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்பற்றி) கேள்வி கேட்கப்படும்’. (அல்குர்ஆன் 17:36)


‘ஒருவனிடம் கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை’. (அல்குர்ஆன் 50:18)


நிச்சயமாக அடியான் சில நேரங்களில் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்கு உரிய விஷயங்களை அதன் முக்கியத்துவத்தை உணராமலேயே கூறுகிறான். (எனினும்) அல்லாஹ், அதற்காக அவன் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். நிச்சயமாக அடியான் சிலவேளைகளில் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய விஷயங்களை அதன் தீங்குகளை உணராமலேயே பேசிவிடுகிறான். அதன் காரணமாக அவன் நரகில் வீழ்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)


ஓர் அடியான் சில வார்த்தைகளை மொழிகிறான். ஆனால் அதைப்பற்றி (நல்லதா? கெட்டதா? என்று) சிந்திப்பதில்லை. இதன் காரணமாக கிழக்கிற்கும், மேற்கிற்கும் மத்தியிலுள்ள தூரத்தைவிட அதிகமான தூரத்தில் நரகில் விழுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)


‘(நாளை மறுமையில்) மனிதர்களை முகம் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை என ஒரு நீண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)


அரைகுறை ஞானமுள்ள எந்த விஷயத்தையும் நாம் வெளிப்படுத்தக் கூடாது! ஏனென்றால் நாம் பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் தவறாகப் பயன்படுத்திய வார்த்தைகளைப் பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, அவற்றிற்குரிய தண்டனை வழங்கப்படும்.


நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும் என நபி ஸல் அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க வேண்டும். இந்த ஹதீஸ் நாவை எந்த அளவிற்கு கவனமாகக் கையாள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.


நாவினால் நிகழும் சில தவறுகள் இங்கே குறிப்பிடப்படுகின்றன. அவற்றைத் தெரிந்து முற்றிலும் அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.



1. புறம் பேசுதல்

மனிதர்கள் கூட்டமாக கூடி விட்டாலே அங்கு யாரையாவது குறை கூறி விடுகின்றனர். ஆண், பெண் இருபாலாரும் அடுத்தவரைப் பற்றி குறிப்பிட்டு புறம் பேசுவது வாடிக்கையான செயலாக மாறி விட்டது. இப்படி அடுத்தவரைக் குறை கூறி பேசுவதை இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.


சிலர் நாங்கள் உண்மையைத்தானே கூறுகிறோம், இதில் தவறென்ன இருக்கிறது? என்று கேட்கலாம். ஒருவரிடத்தில் இருக்கும் தவறைக் கூறுவதே புறமாகும். ஒருவரிடத்தில் தவறிருக்கக் கண்டால் அந்த தவறை உரியவரிடம் நேரடியாகக் கூறி அவரது தவறை நீக்க முயல வேண்டுமே தவிர ஊர் முழுக்கப் பறைசாற்றக் கூடாது.


ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் புறம் பேசுவது என்றால் என்ன? என தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு தோழர்கள் அல்லாஹ்வும் அவனது திருத்தூதருமே இதனை நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (புறம் பேசுவது என்பது) நீர் உம் சகோதரரைப் பற்றி அவர் வெறுப்பதைக் கூறுவதாகும் என பகர்ந்தார்கள். நான் கூறும் விஷயம் என் சகோதரரிடம் இருந்தால்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் கூறும் விஷயம் அவரிடம் இருந்தால் நீர் அவரைப் பற்றி புறம் பேசிவிட்டீர். நீர் கூறும் விஷயம் அவரிடம் இல்லையென்றால் நிச்சயமாக நீர் அவரைப்பற்றி அவதூறு கூறிவிட்டீர் எனப் பகர்ந்தார்கள். (நூல்: முஸ்லிம்)

புறம் பேசுவது தனது சகோதரரின் மாமிசத்தைப் புசிப்பதைப் போன்றது என்று திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றது.

‘மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்’. (49:12)

புறம் பேசுதலைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது புறம் பேசுபவரின் வார்த்தையைக் கடலில் போட்டால் இதனுடைய கடுமையான சொல்லின் காரணத்தால் கடல் நீரின் தன்மையே மாறிவிடும் என்றார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம், சஃபிய்யா (ரலி) அவர்களுடைய இன்னன்ன விஷயங்கள் உங்களுக்குப் போதுமானதாகும் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ கூறிய அந்த வார்த்தையை கடல் நீரில் கலந்தால் (அதனுடைய தன்மையையே) மாற்றி விடும் என்றார்கள். (நூல்: அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்)

புறம் பேசுபவர்கள் மறுமை நாளில் கடுமையான வேதனை செய்யப்படுவார்கள். தமது கரங்களாலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தை கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினால் ஆன நகங்கள் இருந்தன. அவற்றின மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் (தாமே) காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஜிப்ரீலே இவர்கள் யார்? என்று கேட்டேன். இவர்கள் மனிதர்களின் மாமிசத்தை சாப்பிட்டார்கள் (அதாவது புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் பங்கம் விளைவித்தவர்கள் என விளக்கமளித்தார்கள். (நூல்: அஹ்மத், அபூதாவூத்)

இப்படிப்பட்ட பெரும் பாவமான புறம் பேசுதலை நாமும் தவிர்ந்து கொண்டு, அவை பேசப்படும் இடத்தை விட்டு விலகி விடவும் வேண்டும்.

‘(முஃமின்கள்) வீணானதை செவியுற்றால் அதைப் புறக்கணித்து, எங்களுக்கு எங்கள் அமல்கள், உங்களுக்கு உங்கள் அமல்கள்! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை என்று கூறுவார்கள்’. (அல்குர்ஆன் 25:55)

‘(ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்திற்குரியவர்கள்) வீணானவற்றை விட்டு விலகி இருப்பார்கள்’ (அல்குர்ஆன் 23:3)

புறம் பேசுதலைத் தவிர்ந்து கொள்வதற்கு நபி ஸல் அவர்கள் கூறிய மணிமொழிகளை மனதில் பதிய வைக்க வேண்டும். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.


1. முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

2. எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதையே பேசட்டும்! அல்லது வாய் மூடி இருக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

3. நான் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நான் உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளத் தக்க ஒரு விஷயத்தை அறிவியுங்கள்! என்று கேட்டேன். ‘எனது இறைவன் அல்லாஹ் என்று கூறி, பிறகு அதிலேயே உறுதியாக இருப்பீராக’ என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என்னுடைய விஷயத்தில் தாங்கள் அதிகம் அஞ்சுவது என்ன? என்று கேட்டேன். அப்போது தனது நாவை பிடித்துக் காட்டி இது தான் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: சுஃப்யான் இப்னு அப்துல்லாஹ் (ரலி) நூல்: திர்மிதி)



2. அவதூறு

நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர், இம்மையிலும் மறுமையிலும் (அல்லாஹ்வினால்) சபிக்கப்பட்டுள்ளனர். இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன் 24:23)



3. கோள்

‘ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் இல்லாத ஒன்றை கூறி இருவருக்கும் மத்தியில் சண்டை ஏற்படுத்துவதை’ சிலர் தொழிலாகவே கொண்டுள்ளனர். இதனால் எத்தனை குழப்பங்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ பேர் கொலை கூட செய்யப்பட்டுள்ளனர். இப்படி பெரும் பாதிப்புகள் இவ்வுலகில் ஏற்படுவதை ஏனோ சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பதே இல்லை. இப்படி கோள் சொல்லித் திரிபவர்களை அல்லாஹ் மன்னிக்க வில்லையெனில் நரகம் செல்வார்களே தவிர, சுவர்க்கம் செல்லவே முடியாது.

குறை சொல்லி புறம் பேசித்திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)

கோள் சொல்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து செல்லும் போது இந்தப் கப்ருகளில் உள்ள இருவரும் வேதனை செய்யப்படுகின்றார்கள், அவர்கள் இருவரும் (அவர்களின் எண்ணத்தில்) பெரும் பாவத்தினால் வேதனை செய்யப்படவில்லை. என்றாலும் அது பெரும் பாவம் தான். அவ்விருவரில் ஒருவர் கோள் சொல்லித்திரிபவராக இருந்தார். மற்றவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார் எனக் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



4. பொய் சாட்சி

அவர்கள் (அல்லாஹ்வின் அடியார்கள்) பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள். மேலும் அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவர்களாக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள். (அல்குர்ஆன் 25:72)

பெரும் பாவங்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அல்லாஹ்விற்கு இணை வைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது, பொய் சாட்சி சொல்வது’ என்று பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



5. தர்மம் செய்ததை சொல்லிக் காட்டுதல்
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தம் பொருளைச் செலவழிப்பவனைப் போல், கொடுத்ததை சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் தர்மங்களை, பாழக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் 2:264)

மறுமை நாளில் அல்லாஹ் மூன்று சாரார்களுடன் பேசவும மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். கைசேதப்பட்ட, நஷ்டமடைந்த அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். (தனது) கீழாடையை (பெருமைக்காக, கரண்டைக் காலுக்கு கீழ்) தொங்க விடுபவன், (தான் செய்த தர்மத்தை) சொல்லிக் காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தனது பொருளை விற்பவன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம்)



6. சபித்தல்

ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி, அபூதாவூது)

ஒருவர் இன்னொருவரை ‘பாவி’ என்றோ ‘காஃபிர்’ என்றோ கடுஞ்சொல் கூற வேண்டாம். (ஏனெனில்) குற்றம் சுமத்தப்பட்டவர் அப்படி இல்லையெனில் அது அவர் (சொன்னவர்) பக்கமே திரும்பி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)



7. இறந்தவர்களை ஏசக்கூடாது
இறந்தவர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் முற்படுத்தியதற்குரியதை பெற்றுக் கொண்டார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)



8. பக்கத்து வீட்டுக்காரருக்கு துன்பம் தருதல்
யார் அல்லாவையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் பக்கத்து வீட்டாருக்கு துன்பம் தராமல் இருக்கட்டும். யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும், இல்லையெனில் மௌனமாக இருக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



9. காலத்தைத் திட்டுதல்

காலத்தைத் திட்டுவதின் மூலம் மனிதர்கள் என்னை சங்கடப்படுத்தி விடுகிறார்கள், காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச் செய்பவனும் நானே என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி)

இதுவரை நாம் நாவினால் ஏற்படும் தீங்குகளையும் அவற்றைப் பற்றிய திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் எச்சரிக்கைகளையும் கண்டோம்.

சொர்க்கம் செல்வதற்கு நாவு தடையாகிறது என்பதை எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் நாவை சரியாக பயன் பயன்படுத்துவோருக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதையும் கூறுகிறார்கள்.

எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கின்றாரோ அவருக்கு சொர்க்கம் கிடைக்க நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



அன்புள்ள சகோதர சகோதரிகளே!



இதுவரை நாவின் விபரீதத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம். இதே நாவை நல்ல காரியங்களில் பயன்படுத்தினால் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன. நாவைக் கொண்டு தஸ்பீஹ் செய்யலாம், குர்ஆன் ஓதலாம், நன்மையை ஏவி தீமையைத் தடுக்கலாம். இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களில் ஈடுபடலாம். நாவை நல்ல வழிகளில் பயன்படுத்துவதினால் கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.



1. குர்ஆன் ஓதுதல்

நீங்கள் குர்ஆனை ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்கு (அதை ஓதியவர்களுக்கு) பரிந்துரை செய்யக்கூடியதாக வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

குர்ஆனில் ஓர் எழுத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும். ‘அலிஃப், லாம், மீம் என்பது ஓர் எழுத்து’ என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஓர் எழுத்து, லாம் என்பது ஓர் எழுத்து, மீம் என்பது ஓர் எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)



2. தஸ்பீஹ் செய்தல்

இரு வார்த்தைகள் (சொல்வதற்கு) நாவுக்கு மிக இலகுவானவை, இறைவனின் தராசில் மிக கனமானவை, இறைவனிடம் மிக விருப்பத்திற்குரியவை (அவ்விரு வார்த்தை) ‘சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)



3. நன்மையை ஏவி தீமையை தடுத்தல்

(விசுவாசங் கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களில் எல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 3:110)

நாவு மனிதனை சுவர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ கொண்டு செல்லக்கூடிய உறுப்பு என்பதை தெரிந்து கொண்டோம். ஆகவே நரகம் செல்லக் கூடிய (சொல்) செயல்களிலிருந்து நாம் நாவைப் பாதுகாத்து சுவர்க்கம் செல்லக்கூடிய (சொல்) செயல்களைச் செய்து நாவினால் சுவர்க்கம் செல்ல நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.