திருகோணமலை கிண்ணியாவில் தொடர்ந்தும் முறுகல் நிலை தீவிரமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மர்ம மனிதர்கள் என்போரை பொதுமக்கள் துரத்தி சென்ற போது அவர்கள் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கடற்படை முகாமுக்குள் ஓடித் தப்பியதும் பின்னர் அந்த முகாம் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதும் ஏற்கனவே வெளியான செய்திகள்.
இந்தநிலையில் சம்பவத்தின் போது படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான இரண்டு பொதுமக்களில் ஒருவரின் நிலைமை மிகவும் மோசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரும் காயம் அடைந்த மற்றும் ஒருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை சம்பவத்தின் போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 24 பொதுமக்களும் சீனன்குடா பாலத்துக்கு அருகில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை விடுவிக்கவேண்டும் எனக் கோரி, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கிண்ணியா அரச அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 27 பேரையும் விடுவிக்குமாறு கோரியுள்ளனர்.
அதேவேளை படைத்தரப்பினரும் கவச வாகனங்கள் சகிதம், தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டாம் இணைப்பு
இரண்டாம் இணைப்பு
கைதுசெய்யப்பட்ட 24 பேரும் பிணையில். கிண்ணியாவில் முறுகல் தணிந்தது.
திருகோணமலை கிண்ணியாவில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை தணிந்துள்ளது.
கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதீயுதீன், ஏ.ஏச்.எம்.பௌசி உள்ளிட்ட விசேட தூதுக்குழுவொன்று விசேட ஹெலிக்கப்பட்டர் மூலம் இன்று காலை கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா கிண்ணியா பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டுள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கலவரங்கள் எவற்றிலும் ஈடுபடாது அமைதியாக வீடுகளில் இருக்குமாறும் பொதுமக்களுக்கான பாதுகாப்பை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் குழப்ப நிலைமை ஏற்பட்டது.
இதனால், 24 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் நிலவிய பதற்ற நிலையை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், திருகோணமலை மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெஸ் பெரோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கிண்ணியா பிரதேச செயலகத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 24 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.
இதேவேளை, கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையையடுத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 24 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.
காவல்துறை ஜீப் எரிப்பு
சிறிலங்கா காவல்துறையினரின் ஜீப் வண்டியொன்றையும் பொதுமக்கள் தீயிட்டு எரித்தனர். பொதுமக்களின் கல்வீச்சுக்கு இலக்காகி காவல்துறையினர் இருவரும் காயமடைந்தனர்.
அதேவேளை, கிண்ணியா மத்திய பள்ளிவாசலுக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் புகுந்த மர்ம மனிதர்கள் பத்துப் பேர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
